Tuesday, June 17, 2008

கனவுகளின் அழுகையொலி.

எஸ்போஸ்:கவிதைகள்
___________________________________

மரணம் தூங்கும் சுவர்களில்
இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறது
காலப்பேய்நிழல்.

அந்தரத்தில் உதிர்ந்து போகும் சிறகுகள் பற்றிய துயரத்தை
இடிபாடுகளுக்கு மேலாக பாடிப்போகின்றன பறவைகள்
நாட்செல்ல நாட்செல்ல
மரங்களில் எழுதப்பட்ட அவற்றின் வாழ்வு
சாம்பல் பூத்து சாம்பல் பூத்து நிழலழிந்து போகிறது.

பறவைகள் கலைந்து போகின்றன கூடுகளைவிட்டு

பிணமெரிந்த புகையாய் நிலமெங்கும் படர்கிறது
காலப்போய்நிழல்.
நந்தவனங்களுக்கு மேலாய் பறந்துபோகின்றன வெளவால்கள்
கனிகளை புசித்து புசித்து
சாபத்தின் சிறகுகளை பறவைகளின் சிறகுகளில் வீசிச்செல்கின்றன
வெறுமையும் சாவின் அமைதியும் மிகப்பழைய கூடுகளில் உறைகிறது
அதே துயரம்
அதே வலிகள்.

பறவைகள் வாழ்ந்த கொடிகளில்
வனப்பும் வாசமும்
நள்ளிராக்கருகாமையில் வழி தவறிப்போயிற்று.

இருள் தந்த மகிழ்ச்சியின் வெறியில்
ஆடைகளை அவிழ்த்துதெறிந்து நிர்வாணிகளாயின வெளவால்கள்.

அழியுண்ட கனவுகுகளின் அழுகைச் சகதிக்குள் போய்விழுகிறது
சிறகிழந்த பறவைகளின் வாழ்வு.
----------------------------------------

No comments: