Thursday, June 19, 2008

விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

எஸ்போஸ்:கவிதைகள்

-----------------------------------------------------------
நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
உனது தோள்களில்
தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கண்மூடித்தனமாய்
உன்னை நான் எப்படி வர்ணிப்பது
என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்
மழிக்கப்பட்ட உனது முகத்தில்
ஈ கூட உட்கார அஞ்சுகிறது
உனது வரவைக் குறித்து
யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்
துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி


இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய
துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்
மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய
முளைகளை நான் கண்டேன்
நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன
கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட
பழைய நகரங்களையும் நோக்கி
எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
உனது விழியில் நடுங்குகின்றன
நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்
என்னிடமோ
உனது நெஞ்சு வெடித்துச் சிதறம்படியாய்
அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை
எனினும்
துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்
உனது கன்னத்தில்
விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு
நடந்து வருகிறாய்

யாரோ சொன்னார்கள்
அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
சீருடையைக் கிழித்து வீசு
ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
உழைக்கவும்
தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
உன்னைப் போலவே மாற்று அவனை
அல்லது நானுனக்குச் சொல்கிறேன்
அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்
அந்தச் சனியனை
கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்
அவனை நோக்கித் திருப்பு
உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்
நீ அஞ்சாதே
உன்னை அவர்கள் கொல்வார்கள்
நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
அப்பரிசு
நிச்சயமற்ற உனது காலத்தில்
எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது
வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே
நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே
வாழ்கிறாள் என்பதையும்
அவர்கள் மறுத்ததைப் போலவே
உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்
காய்ச்சியதைப் போலவே
நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்
நான் நினைக்கிறேன்
இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்
செத்துப் போவதும் ஒன்றுதான்
உழுத வயல்களே
முளைக்கப் போடப்படாத தானியங்களே
வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே
சொல்
துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை
உன்னில் நட்டு வைத்தது யார்?
நட்டு வைத்தது யார்?
ஆவர்களை நோக்கி
விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே
மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்
யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க
எங்களின் குதிரைகளைக் கொன்று
அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்

அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்
நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்
எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ
இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின
அவர்கள் தமது குதிரைகளோடு
எமது தேர்ப்பாதைகளெங்கும்
வெறிபிடித்தலைந்தார்கள்
கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை
நாங்கள் இழந்தோம்

தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்
பேச்சில் கிறங்கி
இன்னொரு கூட்டம்
இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது
வெட்கித் தலைகுனியும் நீ
போய்விடு
புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது
நீ போய்விடு

போஸ் நிஹாலே.
18.11.1999
--------------------------------------------

No comments: