Tuesday, August 19, 2008

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு

எஸ்போஸ்

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு
மழைக்காலம் தொடங்கிவிட்டது;
ஈசல்கள் பறக்கின்றன.
நண்பர்களே!
இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,
இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்
எமது கண்களை நோக்கி வருகின்றன.
ஈசல்கள்
இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.
காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:
தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?
ஒளியற்ற இந்த இரவினுள்
சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்
மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்
ஈசல்கள் ஊர்கின்றன.
நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்
தேவாலயங்களில்
கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;
அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,
எவ்வளவு சந்தோசமானது
கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!
எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.
நண்பர்களே!
சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
மழைக்காலம் தொடங்கிவிட்டது
கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
நாம் என்ன செய்ய!
அவர்களே எம்மைப் பணித்தனர்
இரத்தத்தைக் குடிக்குமாறும்
சரீரத்தைப் புசிக்குமாறும்.
இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்
சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்
அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு
நீங்களே உணர்வீர்கள்,
அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத
உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென
முன்வினைச் செயலும்
கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்
உங்களைக் காப்பாற்றிவிட்டதென.
அதன் நிமித்தம்,
குருதிச் சிதறல்களும்
கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்
காதல்களையும்
பெற்றோர்களையும்
மனைவியரையும்
பிள்ளைகளையும்
எழுதிய சொற்களால் நிறைந்த
உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய
ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்
நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
எனினும் நாம் காண்கிறோம்,
இரவை அள்ளிச் செல்லும்
எமது ஓலத்தின் அடியிலிருந்து
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை.
ஈசல்கள் எமது விழிகளை முறித்து
தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.
எனினும் நாம் காண்கின்றோம்,
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.

Saturday, August 2, 2008

எஸ்போஸ்:கவிதைகள்


அழகிய இரவுபற்றிய எனது கவிதைகளில்
எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன
மிருகங்கள் பற்றிய அச்சத்தால் அழுகிச்சிதைந்தது நிலவு
நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்
நான் இழந்தேன்

எனது கவிதைகளின் காதலையோ
மனச் சுவர்களில் அவை புணரும் காட்சிகளையோ
அவற்றின் அந்தரங்களையோ
வெறியோடு தின்னுகின்றன மிருகங்கள்

துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின்
எல்லையற்ற விதி பற்றியும்
மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்
இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை

எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய
கவிதைகளின்
பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது

நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு
நான் இறந்தேன் மீண்டும் மீண்டும்
நூறு தடவைகளுக்கு மேல்
மிருகங்கள் உடலைத் தின்னுகின்றன
கவிதைகளற்ற உடலை உயிரற்ற உடலை

Wednesday, July 16, 2008

ஒளி சுடர்ந்த என் மனமும்நெருப்பெரித்த உன் மனமும்


எஸ்போஸ்:கவிதைகள்

I

தயக்கத்தினூடே நிகழும் வார்த்தைக்கணத்தில்உன்னுடன் பேசாத நூறு சொற்கள் எழுதித்தீர்ந்தனமனதில்நாங்களோஎமக்கு எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில்மூன்று நிமிடங்கள் பேசினோம்
அறையின் சுவரில்இரைக்காக அலைந்து கொண்டிருந்தது பல்லியுகங்களுக்கப்பாலான கவிதையொன்றுலட்சக்கணக்கான கிறுக்கல்களினடியில் உறைந்துபோயிற்றுபூக்கள் உதிர்ந்து காற்றில் மிதக்கின்றனகாற்றோ முற்றத்தை அள்ளிச் செல்கிறது
வானம் நீலநிறமாயிருக்கிறதென்று நானும்அதே நீலம்பரவசங்களால் ஆகர்ஸிக்கப்பட்டிருக்கிறதென்று நீயும்ஒருவருக்கொருவர் எண்ணக்கூடும்எனினுமென்னமனதில் எழுதிய சொற்களோ இந்தக்கணம் வரைஎந்த உருவமுமற்றுப்போயின நிழலில் கரைந்து

II

உனது முகம் பற்றிய படிமம்உனது புன்னகையாய் - வண்ணத்துப்பூச்சியொன்றின்சிறகைப்போல – என்னுள் படபடக்கிறது
இருவருமே தெரிந்துவைத்திருக்காத நாளொன்றில்எப்போதோ பரிச்சயமான ஒற்றைச்சொல்லில் நாங்கள்பேசக்கூடும் மீண்டும்காற்று அதில் எந்த வார்த்தையையும்வானை நோக்கி இழுத்துச்செல்லாதிருந்தால்மனமிடை எழுதிய சொற்களில் ஒன்றையேனும்உன்னை நோக்கி வீசவே விரும்புவேன்மௌனம் சிதறியுடையும் அக்கணத்தில்எனது சொற்களோதேவதைகள் வாழ்ந்துபோன வனம்போலபூத்திருக்கும் உன்னுள்

நன்றி- காலச்சுவடு

இதழ்-29 ஏப் - ஜூன் 2000

Monday, June 23, 2008

மூளும் தீயும் நீளும் குரலும்

எஸ்போஸ்:கவிதைகள்


கவிதை 01
துப்பாக்கி வேட்டொலிகளுக்குள்ளும்
சப்பாத்த மிதியடிகளுக்குள்ளம்
சிதைவுறும்
எமக்கான கனவுகளனைத்தும்.
எம் ஒவ்வொருவரினதும் இருப்பும்
ஏதாவது ஒரு தெருக்கோடியிலோ
தொலைதூரக் காடுகளிலோ அல்லது அதற்கப்பால்
வனந்தர வெளிகளிலோ
நிலைகொண்டிருக்கும்.
ஒரு நிலவு காலத்தில்
அல்லது முகங்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாத
துயர் மிகுந்த கரிய இருளில்
நிழலாம் எமக்கான சந்திப்பகள்.
நாம் காதலர்களாகவும்
பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளாகவும்
குழந்தைகளைப் பிரிந்த தாய் தந்தையராகவும்
கணவன் மனைவியராகவும் இருக்கிறோம்.
உனக்கு எப்போதுமே சந்தோசமளித்திருக்கமுடியாது
இளமைக்காலம் பற்றி நீயும்
பனியடர்ந்த காடுகளுக்குள் வாழும்
எனது இளமைக்காலம் பற்றி நானும்
எண்ணிப் பார்க்க முயல்வோம்
கணங்களில் அல்லது அதைவிட குறைவான நேரத்தில்.
மீளவும் சப்பாத்தக்களின் ஒலி நிலத்தில் அதிர்கிறது.
சகீ….
எமக்கான ஒவ்வொன்றின் முடிவிலும்
நாளை பற்றிய எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும்
தவிர
வேறு என்னதான் இருக்கிறது சொல்.
--------------------------------------------------------
06 பெப்ரவரி 97
-போஸ்நிஹாலே


கவிதை 02

பூமியின் ஒளி பொருந்திய முகங்கள்
குழந்தைகளினுடையவை.
துயரம் தரும்
கனவுகளையும்
எமது காலங்களையும் அழித்துவிட்டு- எமது காலங்கள் நெருப்பில்
உழல்பவை
குழந்தைகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.
நம்பிக்கைதரும் ஒரு சூரியனை
அல்லது ஒரு பௌர்ணமியை
மிக மெல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய
மல்லிகை மலர்களை
நாங்கள் அவர்களுக்காய் பரிசளிப்போம்.
கந்தக நாற்றம் எமது இருதயங்களில் உறைந்து விட்டதைப்போல
பிரிவின் துயரங்களும்
மன அழுத்தங்களும்
எமது வேர்களை அரித்து தின்று விட்டதைப் போல
அவர்களுடைய இருதயங்களை
அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்
உண்மையில்
நாம்
இழந்த சந்தோசங்களை
அவர்களின் மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்
அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும்
எமக்குச் சொந்தமானவை எனில்
பூமியின் ஒளி பொருந்திய முகங்களை
அவர்களிடம் பரிசளிப்போம்.
----------------------------------------
98 கார்த்திகை 04
-போஸ்நிஹாலே
சரிநிகர் இதழ் 165
-------------------------

சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்

எஸ்போஸ்:கவிதைகள்


உன்னை அவர்கள் கைது செய்து

எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்

எனது குழந்தைக்குப் பிடித்தமான

உனது "சேட் கொலரின்" மடமடப்புச் சத்தம்

இன்னும் அவனுடைய விரலிடுககுகளில்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

அவர்கள் வாகனங்களோடு

நட்சத்திரங்களோ ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்

சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்

கொண்டு வைத்திருந்தார்கள்

அது

இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்

எனது குழந்தையின் கண்களில்

எங்களுடனேயே தங்கியிருக்கிறது.

அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்

நீண்ட கூரிய ஆயுதங்களால் தாங்கவும்

கொல்லவுங் கூடமுடியும்.

அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை

அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்

சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்

நிரூபித்து விட்டது …

நிரூபித்து விட்டது…

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே

சிறைக் கம்பியிடுக்குகளின் வழி

ரோஜாப் பூக்களின் வாசனையும்

வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்

உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப போவார்கள்

நிரந்தரமாகவே

------------------------
போஸ்நிஹாலே

கிளிநொச்சி

சரிநிகர் இதழ் 170
----------------------------

பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்

எஸ்போஸ்:கவிதைகள்

அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய்
என்றாலும்
கண்களைக் குருடாக்கிக் கொண்டு
நிலவையும் நட்சத்திரங்களையும்
தனது தீராத வலியால் அணைத்தபடி
அழிவுகாலம் தொடர்கிறது
உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த
நெல்மணிகளை
உனக்கு மட்டுமே பூர்விகமான குடிசையை
நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த மிகப் பழைய
தங்க வளையல்களை
தீராத எல்லைச் சண்டையில்
யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை;
எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும்
அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது
யாருக்குத் தெரியும்
நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை
உன்னைச் சபித்துவிடுமென்று
நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?
இப்படியொரு சாபக்கேட்டை
உனது குழந்தைகளுக்கு
நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று,
என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது;
அவர்கள் வந்து விட்டார்கள்
நீயே சொல்
சாத்தானின் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல்
சாத்தியமா?

--------------------------
05.08.1999
மூன்றாவது மனிதன் ஜனவரி - மார்ச்
-------------------------------------------------------------

Thursday, June 19, 2008

விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

எஸ்போஸ்:கவிதைகள்

-----------------------------------------------------------
நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
உனது தோள்களில்
தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கண்மூடித்தனமாய்
உன்னை நான் எப்படி வர்ணிப்பது
என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்
மழிக்கப்பட்ட உனது முகத்தில்
ஈ கூட உட்கார அஞ்சுகிறது
உனது வரவைக் குறித்து
யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்
துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி


இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய
துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்
மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய
முளைகளை நான் கண்டேன்
நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன
கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட
பழைய நகரங்களையும் நோக்கி
எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
உனது விழியில் நடுங்குகின்றன
நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்
என்னிடமோ
உனது நெஞ்சு வெடித்துச் சிதறம்படியாய்
அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை
எனினும்
துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்
உனது கன்னத்தில்
விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு
நடந்து வருகிறாய்

யாரோ சொன்னார்கள்
அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
சீருடையைக் கிழித்து வீசு
ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
உழைக்கவும்
தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
உன்னைப் போலவே மாற்று அவனை
அல்லது நானுனக்குச் சொல்கிறேன்
அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்
அந்தச் சனியனை
கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்
அவனை நோக்கித் திருப்பு
உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்
நீ அஞ்சாதே
உன்னை அவர்கள் கொல்வார்கள்
நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
அப்பரிசு
நிச்சயமற்ற உனது காலத்தில்
எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது
வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே
நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே
வாழ்கிறாள் என்பதையும்
அவர்கள் மறுத்ததைப் போலவே
உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்
காய்ச்சியதைப் போலவே
நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்
நான் நினைக்கிறேன்
இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்
செத்துப் போவதும் ஒன்றுதான்
உழுத வயல்களே
முளைக்கப் போடப்படாத தானியங்களே
வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே
சொல்
துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை
உன்னில் நட்டு வைத்தது யார்?
நட்டு வைத்தது யார்?
ஆவர்களை நோக்கி
விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே
மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்
யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க
எங்களின் குதிரைகளைக் கொன்று
அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்

அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்
நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்
எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ
இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின
அவர்கள் தமது குதிரைகளோடு
எமது தேர்ப்பாதைகளெங்கும்
வெறிபிடித்தலைந்தார்கள்
கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை
நாங்கள் இழந்தோம்

தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்
பேச்சில் கிறங்கி
இன்னொரு கூட்டம்
இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது
வெட்கித் தலைகுனியும் நீ
போய்விடு
புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது
நீ போய்விடு

போஸ் நிஹாலே.
18.11.1999
--------------------------------------------