Monday, June 23, 2008

மூளும் தீயும் நீளும் குரலும்

எஸ்போஸ்:கவிதைகள்


கவிதை 01
துப்பாக்கி வேட்டொலிகளுக்குள்ளும்
சப்பாத்த மிதியடிகளுக்குள்ளம்
சிதைவுறும்
எமக்கான கனவுகளனைத்தும்.
எம் ஒவ்வொருவரினதும் இருப்பும்
ஏதாவது ஒரு தெருக்கோடியிலோ
தொலைதூரக் காடுகளிலோ அல்லது அதற்கப்பால்
வனந்தர வெளிகளிலோ
நிலைகொண்டிருக்கும்.
ஒரு நிலவு காலத்தில்
அல்லது முகங்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாத
துயர் மிகுந்த கரிய இருளில்
நிழலாம் எமக்கான சந்திப்பகள்.
நாம் காதலர்களாகவும்
பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளாகவும்
குழந்தைகளைப் பிரிந்த தாய் தந்தையராகவும்
கணவன் மனைவியராகவும் இருக்கிறோம்.
உனக்கு எப்போதுமே சந்தோசமளித்திருக்கமுடியாது
இளமைக்காலம் பற்றி நீயும்
பனியடர்ந்த காடுகளுக்குள் வாழும்
எனது இளமைக்காலம் பற்றி நானும்
எண்ணிப் பார்க்க முயல்வோம்
கணங்களில் அல்லது அதைவிட குறைவான நேரத்தில்.
மீளவும் சப்பாத்தக்களின் ஒலி நிலத்தில் அதிர்கிறது.
சகீ….
எமக்கான ஒவ்வொன்றின் முடிவிலும்
நாளை பற்றிய எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும்
தவிர
வேறு என்னதான் இருக்கிறது சொல்.
--------------------------------------------------------
06 பெப்ரவரி 97
-போஸ்நிஹாலே


கவிதை 02

பூமியின் ஒளி பொருந்திய முகங்கள்
குழந்தைகளினுடையவை.
துயரம் தரும்
கனவுகளையும்
எமது காலங்களையும் அழித்துவிட்டு- எமது காலங்கள் நெருப்பில்
உழல்பவை
குழந்தைகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.
நம்பிக்கைதரும் ஒரு சூரியனை
அல்லது ஒரு பௌர்ணமியை
மிக மெல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய
மல்லிகை மலர்களை
நாங்கள் அவர்களுக்காய் பரிசளிப்போம்.
கந்தக நாற்றம் எமது இருதயங்களில் உறைந்து விட்டதைப்போல
பிரிவின் துயரங்களும்
மன அழுத்தங்களும்
எமது வேர்களை அரித்து தின்று விட்டதைப் போல
அவர்களுடைய இருதயங்களை
அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்
உண்மையில்
நாம்
இழந்த சந்தோசங்களை
அவர்களின் மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்
அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும்
எமக்குச் சொந்தமானவை எனில்
பூமியின் ஒளி பொருந்திய முகங்களை
அவர்களிடம் பரிசளிப்போம்.
----------------------------------------
98 கார்த்திகை 04
-போஸ்நிஹாலே
சரிநிகர் இதழ் 165
-------------------------

No comments: